வணிகச் செய்திகள்

பொதுத்தேர்தலுக்குப் பின், அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்க வாய்ப்பு

பொதுத் தேர்தலுக்குப் பின் அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் இதுவரை இந்த நிறுவனங்களின் பங்கு முதலீடு ரூ.11,000 கோடியை தாண்டியுள்ளது.

ஜனவரி மாதத்தில்…

ஜனவரி மாதத்தில் அன்னிய நேரடி முதலீடு 1.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு 218 கோடி டாலர் அளவிற்கு இருந்தது. ஏப்ரல் – ஜனவரி மாத காலத்தில் இந்த முதலீடு 2 சதவீதம் குறைந்து 1,874 கோடி டாலராக உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் முதலீடு 1,910 கோடி டாலராக இருந்தது. வெளிநாட்டு நிறுவனங்கள் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

ரூபாய் மதிப்பு அதிகரித்து வருகிறது. சில்லறை விலை பணவீக்கம் குறைந்திருப்பதுடன், நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரிக்காது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவையனைத்துமாக பொருளாதார முன்னேற்றத்திற்கு வகை செய்யும் என அவர்கள் கூறினர்.

வளர்ச்சியை துரிதப்படுத்த அதிக அளவு வெளிநாட்டு முதலீடு தேவைப்படுகிறது. மேலும் அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி, 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4.5 சதவீதமாக குறைந்தது. இதனால் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் பின்னடைவு ஏற்பட்டது. ஏப்ரல் -ஜனவரி மாத காலத்தில் அன்னிய நேரடி முதலீடு குறைந்ததற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.

உள்கட்டமைப்பு திட்டங்கள்

பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 ஏப்ரல் – 2017 மார்ச்) உள்கட்டமைப்புத் திட்டங்களில் 1 லட்சம் கோடி டாலர் முதலீட்டை ஈர்க்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த மாபெரும் இலக்கை எட்ட வேண்டுமானால் அன்னிய நேரடி முதலீட்டை அதிகம் ஈர்க்க வேண்டியது அவசியம். அன்னிய நேரடி முதலீடு நீண்ட கால முதலீடு என்றும், ஆக்கப்பூர்வமான முதலீடு என்றும் கருதப்படுகிறது. அதேசமயம், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு குறுகிய கால அடிப்படையிலானது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply