இறக்குமதி செய்திகள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் தங்கம் இறக்குமதி 74 சதவீதம் குறைந்தது

நடப்பு 2014-15-ஆம் நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் தங்கம் இறக்குமதி சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 74 சதவீதம் சரிவடைந்து 678 கோடி டாலரிலிருந்து 175 கோடி டாலராக குறைந்துள்ளது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் மேற்கொண்ட நடவடிக்கைகளே இதற்கு காரணமாகும்.

வர்த்தக பற்றாக்குறை

தங்கம் இறக்குமதி குறைந்ததையடுத்து ஏப்ரல் மாதத்தில் சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையில் உள்ள வித்தியாசமான வர்த்தக பற்றாக்குறை 43 சதவீதம் 1,008 கோடி டாலராக குறைந்துள்ளது.

தங்கம் இறக்குமதி 2012-13-ஆம் நிதி ஆண்டில் 830 டன்னாக உயர்ந்து இருந்தது. இதனையடுத்து அந்த நிதி ஆண்டில் அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு 8,820 கோடி டாலராக உயர்ந்து இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாகும்.

நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பதால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து கச்சா எண்ணெய், பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றின் இறக்குமதி செலவினம் உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும்.

நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பிற்கு முக்கிய காரணியாக உள்ள தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு அதன் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதமாக உயர்த்தியது. இது 2012 ஜனவரி மாதத்தில் 2 சதவீதமாகத்தான் இருந்தது. மேலும் தங்க நாணயங்கள் மற்றும் பதக்கங்கள் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை ஆபரணங்களாக மாற்றி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் ரிசர்வ் வங்கி விதித்தது.

இதுபோன்ற காரணங்களால் கடந்த 2013-14-ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 3,200 கோடி டாலராக குறைந்தது. இது உள்நாட்டு உற்பத்தியில் 1.7 சதவீதமாகும்.

ஆபரணங்கள்

எனினும் தங்கம் இறக்குமதி குறைந்துள்ளதால் உள்நாட்டிலுள்ள நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக திகழும் துறைகளில் இதுவும் ஒன்றாகும். இத்துறையில் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 8 சதவீதம் குறைந்து 327 கோடி டாலராக குறைந்துள்ளது.

Leave a Reply