அரிசி & சிறுதானியங்கள்

மத்திய அரசுக்கு கோதுமை ஏற்றுமதி மூலம் ரூ.2,590 கோடி கிடைக்கும்

இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் உபரியாக உள்ள கையிருப்பிலிருந்து 20 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை 15 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2,590 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இனி சிறிது காலத்திற்கு டெண்டர் விடப்பட மாட்டாது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய அரசு, 2013-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் உபரி கோதுமையில் 20 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய இந்திய உணவுக் கழகத்திற்கு அனுமதி அளித்தது. இதனையடுத்து எஸ்.டி.சி., எம்.எம்.டி.சி. மற்றும் பி.இ.சி. ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் ஒரு டன் கோதுமை 300 டாலர் என்ற அடிப்படை விலையில் ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. பின்னர் பிற நாடுகளின் போட்டியால் இந்த விலை 260-டாலராக குறைக்கப்பட்டது. எனினும் தற்போது விடப்பட்ட டெண்டர்களால் ஒரு டன் கோதுமைக்கு சராசரியாக 283 டாலர் கிடைக்கும் என தெரிகிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு ரூ.2,590 கோடி கிடைக்க வாய்ப்புள்ளது.

கடந்த 2012-13-ஆம் ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்கள் 42 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்தன. இதனால் மத்திய அரசுக்கு 140 கோடி டாலர் அன்னிய செலாவணி வருவாய் கிடைத்தது. ஏற்றுமதியான கோதுமையில் பெரும் பகுதி வங்காளதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எத்தியோப்பியா, ஏமன், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் ஓரளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கோதுமை கொள்முதல் பருவம் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கியது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் இந்த பருவத்தில் மொத்தம் 3.10 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply