இறைச்சி & முட்டை

முட்டை ஏற்றுமதி 2 மடங்கு உயர்வு

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள, தமிழக வர்த்தகர்கள், இரு மடங்கிற்கும் அதிகமாக முட்டை ஏற்றுமதி செய்துள்ளனர். அதேசமயம், சர்வதேச சந்தையிலும், முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது.

நாமக்கல்: தமிழ்நாட்டை சேர்ந்த நாமக்கல் மண்டலம், முட்டை ஏற்றுமதியில், இந்தியாவின் முக்கிய மையமாக விளங்குகிறது. இங்கிருந்து, ஆப்கானிஸ்தான், வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிக அளவில் முட்டை ஏற்றுமதியாகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தான், பக்ரைன், ஓமன் நாடுகளுக்கு அதிக அளவில் முட்டைகள் ஏற்றுமதியாகின்றன.

இதுகுறித்து, நாமக்கல் முட்டை வர்த்தகர்கள் கூட்டமைப்பை சேர்ந்த அலுவலர் ஒருவர் கூறியதாவது:
ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில், தற்போது முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது. இது, வரும் டிசம்பர் வரை நீடிக்கும். இதன் காரணமாகவும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலும், தமிழகத்தில் இருந்து அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பாகிஸ்தான்: கடந்த மாதம், முன்னணி நிறுவனம் ஒன்று, 30 சரக்கு பெட்டகங்களில் முட்டைகளை ஏற்றுமதி செய்தது. ஒரு பெட்டகத்தில், 7.20 லட்சம் முட்டைகள் இடம்பெறும். நடப்பு ஆகஸ்ட் மாதத்தில், 80 சரக்கு பெட்டகங்களில் முட்டைகள் ஏற்றுமதியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, ஒரே மாதத்தில், முட்டை ஏற்றுமதி, இரண்டு மடங்கிற்கும் மேல் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச முட்டை சந்தையில், இந்தியா விற்கு கடும் போட்டியாக, சீனா, பாகிஸ்தான், ஈரான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த நிலையிலும், இந்தியாவின் முட்டை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. நடப்பு பருவத்தில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் மேற்கு ஆப்ரிக்க சந்தைகளுக்கும், வர்த்தகர்கள் முட்டைகளை ஏற்றுமதி செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply