Uncategorizedமுந்திரி & பருப்பு வகைகள்

முந்திரி பருப்பு ஏற்றுமதி 16 % அதிகரிப்பு

கடந்த ஓர் ஆண்டாக தேக்கமடைந்திருந்த முந்திரிப் பருப்பு ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 9 மாதங்களில் முந்திரிப்பருப்பு ஏற்றுமதி 16 சதவீதம் அதிகரித்து, 90,244 மெட்ரிக் டன்னாக உயர்ந்தள்ளது.

கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் நாட்டின் முந்திரிப் பருப்பு ஏற்றுமதி 77,869 மெட்ரிக் டன்னாக மட்டுமே இருந்த நிலையில் அதைக்காட்டிலும் நடப்பு நிதியாண்டில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதிப்பின் அடிப்படையில் கணக்கிடும் போது, கடந்த நிதியாண்டில், ரூ.3,031 கோடி ஈட்டிய நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 24 சதவீதம் வளர்ச்சி கண்டு, ரூ.3,764 கோடி ஈட்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இன்னும் ஓர் காலாண்டு மீதமுள்ளநிலையில், முந்திரிப் பருப்பு ஏற்றுமதியின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, அதிகபட்சமாக கடந்த 201112ம் ஆண்டில், 131,000 மெட்ரிக் டன் அதிக அளவாக ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் அதற்கு ஈடாக ஏற்றுமதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் முந்திரிப் பருப்பின் இறக்குமதியும் 10 சதவீதம்வரை குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 795 மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் 662 மெட்ரிக் டன்னாகக் குறைந்துள்ளது.

இது குறித்து இந்திய முந்திரிப்பருப்பு ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் இயக்குநர், மற்றும் செயலாளர் சசி வர்மா கூறுகையில், அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முந்திரிப்பருப்புக்கான தேவை இன்னும் அதிகரிக்கவில்லை.

ஆனால், அதே சமயம், ஜப்பான், மேற்கு ஆசியா நாடுகள், சவூதி அரேபியா, துபை போன்ற நாடுகளில் இந்திய முந்திரிப்பருப்புகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலையைக் கணக்கிடும் போது, 4வது காலாண்டு முடிவில் ஏற்றுமதி 1,15,000 மெட்ரிக் டன்னை எட்டும். டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைவும் ஏற்றுமதி அதிகரிக்க ஒர் காரணமாகும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply