இறக்குமதி செய்திகள்

மூன்று மாதங்களுக்குப் பின் முதல் முறையாக நிலக்கரி இறக்குமதி 6% குறைந்தது

மூன்று மாதங்களுக்குப் பின் முதல் முறையாக ஏப்ரலில் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது. அம்மாதத்தில் 1.52 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 6 சதவீதம் குறைவாகும். உருக்கு மற்றும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் பழைய கையிருப்பை காலி செய்வதில் தீவிரம் காட்டியதால் நிலக்கரி இறக்குமதி குறைந்ததாக ஆய்வு நிறுவனமான வோர் டீம் தெரிவித்துள்ளது.

இந்தியா 3-வது இடம்

சர்வதேச அளவில் நிலக்கரி இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் ஒரே ஒரு மாதத்தை தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் நிலக்கரி இறக்குமதி அதிகமாக இருந்தது. இந்திய நிறுவனங்கள் மின் உற்பத்தி திறனை அதிகரித்ததாலும், சர்வதேச சந்தையில் விலை குறைந்ததாலும் நிலக்கரி அதிகம் இறக்குமதி செய்யப்பட்டது.

பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம் உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்களின் பங்கு 80 சதவீதமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்நிறுவனம் தனது உற்பத்தி இலக்குகளை எட்ட முடியாமல் திணறி வருகிறது. தொழிலாளர் வேலைநிறுத்தம் மற்றும் கனமழையால் உற்பத்தி பாதிப்பு, சரக்குப் போக்குவரத்து வசதியின்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களால் புதிய சுரங்கப் பணிகளை மேற்கொள்ள இயலாதது போன்ற காரணங்களால் இந்நிறுவனம் தனது உற்பத்தி இலக்குகளை எட்ட முடியவில்லை.

மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2012-13-ஆம் நிதி ஆண்டில் நிலக்கரி உற்பத்தி 55.78 கோடி டன்னாக இருந்தது. சென்ற நிதி ஆண்டின் (2013-14) முதல் 11 மாதங்களில் (ஏப்ரல்-பிப்ரவரி) 49.72 கோடி டன் நிலக்கரி உற்பத்தி ஆகியுள்ளது. அந்த ஆண்டில் மொத்தம் 15.88 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம், சிமெண்டு

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பெரும்பாலும் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. மின்சாரம், சிமெண்டு மற்றும் உருக்கு உற்பத்தி துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு நிலக்கரி முக்கிய எரிபொருளாக உள்ளது. சாதாரண நிலக்கரி அனல்மின் நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது. கோக்கிங் கோல் எனப்படும் உயர்தர நிலக்கரியை உருக்காலைகள் எரிபொருளாகப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply