பொறியியல் & மின்னணு சாதனங்கள்

மோட்டார் வாகன பாகங்கள் ஏற்றுமதி 4.4 சதவீதம் உயர்வு

உள்நாட்டில் கார் விற்பனை சரிவடைந்து வரும் நிலையில், சென்ற 2013–ஆம் ஆண்டில் மோட்டார் வாகன பாகங்கள் ஏற்றுமதி 4.4 சதவீதம் அதிகரித்து 969 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

நன்மதிப்பு

இந்திய மோட்டார் வாகன பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல் இயக்குனர் வின்னி மேத்தா இது குறித்து கூறுகையில், ‘‘இந்திய மோட்டார் வாகன பாகங்கள் மீதான நன்மதிப்பு வெளிநாடுகளில் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, இந்த பாகங்களை கொள்முதல் செய்வதற்காக பன்னாட்டு நிறுவனங்கள்இந்தியாவில் மையங்களை தொடங்கியுள்ளன’’ என்ற தெரிவித்தார்.

சென்ற 2013-ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டிற்கான வாகன பாகங்கள் ஏற்றுமதி 8.6 சதவீதம் அதிகரித்து 78 கோடி டாலராகவும், இங்கிலாந்திற்கான ஏற்றுமதி 3.6 சதவீதம் அதிகரித்து 58 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவிற்கான வாகன பாகங்கள் ஏற்றுமதி 7.1 சதவீதம் குறைந்து 198 கோடி டாலராக குறைந்துள்ளது. இருப்பினும், மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 20 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் வாகன பாகங்கள் ஏற்றுமதி சந்தையில் அமெரிக்கா மிகப் பெரிய நாடாக உள்ளது.

11 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற 2013-ஆம் ஆண்டில் கார் விற்பனை 9.59 சதவீதம் சரிவடைந்து 19.99 லட்சத்திலிருந்து 18.07 லட்சமாக குறைந்துள்ளது. இதனையடுத்து, அவ்வாண்டில் வாகன பாகங்கள் இறக்குமதி 5 சதவீதம் குறைந்து 1,270 கோடி டாலராக குறைந்துள்ளது. எனினும், வாகன பாகங்களைப் பொறுத்தமட்டில் ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது.

இறக்குமதி

சீனாவிலிருந்துதான் இந்தியா, அதிக அளவில் வாகன பாகங்களை இறக்குமதி செய்கிறது. 2013-ஆம் ஆண்டில் அந்நாட்டிலிருந்து 262 கோடி டாலர் மதிப்பிற்கு வாகன பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். சீனாவிலிருந்து விற்பனைக்கு பிறகு பயன்படுத்தும் வாகன பாகங்கள்தான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்ட வாகன பாகங்கள் ஜெர்மனி, ஜப்பான், கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது.

Leave a Reply