காபி & தேயிலை

ரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்

ரஷ்யாஉக்ரைன் எல்லை பிரச்னை யால் ரஷ்யாவிற்கு தேயிலை தூள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.  தென்னிந்தியாவில் குன்னூர் சிடிடிஏ, அரசு கூட்டுறவு, கொச்சின், கோவை ஏல மையங்களில் விற்பனை செய்யப்பட்ட தேயிலை தூளுக்கு கடந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு சராசரியாக ரூ.109 வழங்கப்பட்டது. இந்தாண்டு இதன் விலை ரூ.92.34 பைசாவாக இருந்தது. வட இந்தியாவில் கடந்த ஆண்டு சராசரி விலை ரூ.128.33 பைசா வழங்கப்பட்டது. இந்தாண்டு இதன் விலை ரூ.116.88 பைசாவாக குறைந்துள்ளது. இந்தியாவில் தேயிலை தூள் விற்பனையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு முதல் 2 மாதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் கொல்கத்தா, கவுகாத்தி, சிலிகுரி, அம்ரஸ்கர் ஆகிய ஏல மையங்களில் முதல் 3 மாதங்களில் மட்டும் உற்பத்தி குறைவால் ஏலம் நடக்கவில்லை. இருப்பினும் தேயிலை தூள் விலை சரிந்துள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு கிலோ தேயிலை தூளுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கிலோவுக்கு ரூ.33 வரை விலை சரிந்துள்ளது. இந்தாண்டு முதல் காலாண்டிலேயே வருமானம் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ரஷ்யா, உக்ரைன் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள எல்லை பிரச்னையால் ரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 25 சதவீத தேயிலை தூள் ரஷ்யாவிற்கு தான் அனுப்பப்படுகிறது. தங்களிடம் தேயிலை தூள் இருப்பில் உள்ளதாக கூறி, பாகிஸ்தான் வர்த்தகர்களும் அதிகம் கொள்முதல் செய்யவில்லை. இதுபோன்ற காரணங்களால் தேயிலை தொழில் பாதித்துள்ளது என்று விவசாயிகள், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply