இறக்குமதி செய்திகள்

ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவதால் பருப்பு, சமையல் எண்ணெய் இறக்குமதி செலவினம் குறைகிறது

அண்மைக் காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்து வருகிறது. இது இறக்குமதியாளர்களுக்கு சாதகமான அம்சமாகும். நம் நாட்டில் பருப்பு, சமையல் எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. ரூபாய் மதிப்பு உயர்வால் இதற்கான இறக்குமதி செலவினம் கணிசமாக குறையும் என்றும், உள்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடியும் வரை இந்தப் பொருள்களின் விலை ஏற்றத் தாழ்வுகள் எதுவுமின்றி நிலையாக இருக்கும் என்றும் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

துவரம்பருப்பு

இந்திய பருப்பு மற்றும் தானிய சங்கத்தின் இயக்குனர் கே.சி.பார்த்தியா இது குறித்து கூறும்போது, ‘‘கடந்த நிதி ஆண்டில் 30 லட்சம் டன் துவரம்பருப்பு இறக்குமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் 25 லட்சம் டன் துவரம்பருப்பு இறக்குமதியாகலாம். ரூபாய் மதிப்பு வலுவடைந்து வருவதால் நிலையில் இறக்குமதியாளர்கள் ஊக்கம் பெறத் தொடங்கியுள்ளனர். ரூபாய் மதிப்பு அதிகரிப்பதால் விலையும் சீராக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 60 என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதனால் சமையல் எண்ணெய் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்தான் அதிக பலன் அடைவார்கள் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கருதுகின்றனர். தானிய சங்கத்தின் மதிப்பீடுகளின்படி குறைந்தபட்சம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பருப்பு விலை கிலோ ஒன்றுக்கு ரூ.70 என்ற அளவில் நிலையாக இருக்கும் என தெரிகிறது. மேலும் பருப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு இறக்குமதி கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இதனால் சில வகை பருப்புகளின் விலை குறைந்தாலும் ஆச்சரியம் கொள்வதற்கில்லை என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் 1.98 கோடி டன் பருப்பு உற்பத்தியாகும் என மத்திய அரசு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதில் கொண்டைக்கடலை மட்டும் 98 லட்சம் டன் அளவிற்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் 65 லட்சம் டன் அளவிற்குத்தான் கொண்டைக்கடலை மகசூல் இருக்கும் என வர்த்தக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

சமையல் எண்ணெய்

நடப்பு எண்ணெய் பருவத்தில் (2013 நவம்பர்-2014 அக்டோபர்) 1.05 கோடி டன் முதல் 1.10 கோடி டன் வரை சமையல் எண்ணெய் இறக்குமதியாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 1.80 கோடி டன் சமையல் எண்ணெய் நுகரப்படுகிறது. உள்நாட்டு தேவையை விட உற்பத்தி குறைவாக உள்ளதால் இறக்குமதியை கணிசமாக சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இறக்குமதியாகும் சமையல் எண்ணெயில் பாமாயிலின் பங்கு அதிகமாக உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் பாமாயில் விலை டன்னுக்கு 100 டாலர் உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவதால் இனி சமையல் எண்ணெய் துறையினருக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply