வணிகச் செய்திகள்

ரூ.7.32 லட்சம் கோடி வருவாய் ஈட்டி வரும் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு கனடாவில் வர்த்தக வாய்ப்பு

இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு வடஅமெரிக்காவின் மிகப்பெரிய நாடான கனடாவில் வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது.

நம்நாட்டைச் சேர்ந்த சில சாஃப்ட்வேர் நிறுவனங்கள் கனடா நாட்டில் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. எனினும் இந்திய ஐ.டி. நிறுவனங்களின் ஆண்டு வருவாயில் கனடாவின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது.

நாஸ்காம் அமைப்பு

இந்திய ஐ.டி. துறையின் ஆண்டு வருவாய் (ஏற்றுமதி+உள்நாடு) 11,800 கோடி டாலராக (ரூ.7.32 லட்சம் கோடி) உள்ளது. இதில் கனடா வாயிலாக ஈட்டப்படும் வருவாய் 250 கோடி டாலர் ஆகும். இது மொத்த வருவாயில் 2 சதவீதமாகும். அதேசமயம் கனடா வாயிலாக ஈட்டப்படும் சாஃப்ட்வேர் ஏற்றுமதி வருவாய் ஒட்டுமொத்த வருவாய் வளர்ச்சியை விஞ்சி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என சாஃப்ட்வேர் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கமான நாஸ்காம் அமைப்பின் தலைவர் ஆர். சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

செலவினம்

கனடா நாட்டு நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப செலவினத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளன. இதனால் இந்நிறுவனங்கள் அவற்றின் முக்கிய பணிகளை இந்திய ஐ.டி. நிறுவனங்கள் வாயிலாக நிறைவேற்றும்.

கனடாவின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்திய சாஃப்ட்வேர் நிறுவனங்கள் வருவாயை அதிகரிப்பதற்காக அமெரிக்காவை மட்டும் முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்நிறுவனங்களின் கவனம் கனடாவின்மீது திரும்பி உள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் தலைவர் (வங்கி மற்றும் நிதிச்சேவை) ராஜன் கோஹ்லி இதுகுறித்து கூறுகையில், ‘‘கடந்த 18 மாதங்களுக்கு முன்பு வரை கனடாவில் நாங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை. தற்போது அந்நாட்டை இலக்காகக் கொண்டு செயல்பட முடிவு செய்துள்ளோம். அங்கு வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகி வருகின்றன’’ என்று தெரிவித்தார்.

உலக பொருளாதாரம்

அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால் கடந்த 2008–ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் உருக்குலைந்தது. இதன் காரணமாக இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் இந்திய ஐ.டி. துறையில் மாபெரும் எழுச்சி ஏற்பட்டு இருந்தது.

தற்போது அமெரிக்காவில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. கடந்த 2013–ஆம் ஆண்டு ஏப்ரல் 30–ந் தேதியிலிருந்து இதுவரை டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனால் இந்திய ஐ.டி. நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும்.

மேலும் ஐரோப்பிய நாடுகளும் மந்தநிலையிலிருந்து மீண்டு வருகின்றன. 2014–ஆம் ஆண்டில் உலக அளவில் தகவல் தொழில்நுட்ப வசதிகளுக்கான செலவினம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கனடா நாட்டு நிறுவனங்கள் வாயிலாகவும் இந்திய ஐ.டி. நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்க உள்ளது.

 

ஐ.டி. அவுட்சோர்சிங்

எதிர்வரும் 2014–15–ஆம் நிதி ஆண்டில் ஐ.டி. அவுட்சோர்சிங் துறையின் ஏற்றுமதி 13 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என நாஸ்காம் தெரிவித்துள்ளது. இதன்படி இத்துறை 9,900 கோடி டாலருக்கு ஏற்றுமதி செய்யும். நடப்பு நிதி ஆண்டில் ஐ.டி. அவுட்சோர்சிங் ஏற்றுமதி 13 சதவீதம் வளர்ச்சி காணும் என நாஸ்காம் மதிப்பீடு செய்துள்ளது.

டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் உள்ளிட்ட முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்–டிசம்பர்) சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளன. இனிவரும் காலாண்டுகளிலும் இந்த நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரஸ்பர நிதி துறை

இதன் காரணமாக ஐ.டி. துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் கடந்த 2013–ஆம் ஆண்டில் ‘சென்செக்ஸ்’ 9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், ஐ.டி. குறியீட்டு எண் 59.52 சதவீதம் உயர்ந்துள்ளது.

 நன்றி:தினத்தந்தி

Leave a Reply