வணிகத் தொழில்நுட்பம்

ரூ.88 ஆயிரம் கோடியை எட்டும் ஆன்லைன் சில்லறை விற்பனை

இந்தியாவில், அடுத்த நான்கு ஆண்டுகளில் (2018-ஆம் ஆண்டிற்குள்), ஆன்லைன் சில்லறை விற்பனை ரூ.88,000 கோடியை எட்டும் என ஆய்வு நிறுவனமான ஆர்.என்.சி.ஓ.எஸ். தெரிவித்துள்ளது. இந்த துறை ஆண்டுக்கு சராசரியாக 45 சதவீதம் வளர்ச்சி அடையும் என அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

இணையதள புரட்சி

கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் இணையதள புரட்சி காரணமாக, ஆன்லைன் சில்லறை வர்த்தகம் அமோக வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, ஆன்லைன் சில்லறை விற்பனையின் மொத்த மதிப்பு ரூ.21,000 கோடி என்ற அளவில் உள்ளது. இது 2018-க்குள் நான்கு மடங்கு அதிகரிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இன்டர்நெட் வசதியுடன் கூடிய மொபைல் போன்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஆன்லைனில் ஏராளமானோர் பொருள்களை வாங்க தொடங்கியுள்ளனர். எளிதான பரிவர்த்தனை, நேரம் மற்றும் எரிபொருள் மிச்சம் போன்ற சாதகமான அம்சங்கள் ஆன்லைன் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளன என ஆர்.என்.சி.ஓ.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது. தவிர, ஆன்லைனில் பொருள்களுக்கு அதிக அளவு தள்ளுபடி வழங்கப்படுவதும் வளர்ச்சிக்கு வலுச்சேர்க்கிறது என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இன்றைய நிலையில் ஆன்லைன் மூலம் எலக்ட்ரானிக் பொருள்கள் அதிகம் விற்பனையாகின்றன. அடுத்தபடியாக ஆடைகள் மற்றும் புத்தகங்கள் வாங்கப்படுகின்றன.

வளமான வருங்காலம்

ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு சில தடைக்கற்களும் உள்ளன. கிராமப்புறங்களில் போதிய அளவு இன்டர்நெட் வசதியின்மை, பல வாடிக்கையாளர்களிடையே ஆன்லைன் பரிவர்த்தனைகள் குறித்த சந்தேகங்கள், பாதுகாப்பு குறித்த பயம் ஆகியவை இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களாக உள்ளன. இருந்தாலும், இத்துறைக்கு வளமான வருங்காலம் உள்ளது என ஆர்.என்.சி.ஓ.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply