மீன் & கடல் பொருட்கள்

வரலாறு காணாத அளவிற்கு உயர்வு கடல் உணவுப்பொருள்கள் ஏற்றுமதி ரூ.30,000 கோடியை எட்டியது

2013-14-ஆம் நிதி ஆண்டில் கடல் உணவுப்பொருள்கள் ஏற்றுமதி வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து ரூ.30,000 கோடியை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் கடல் உணவுப்பொருள்களுக்கான தேவைப்பாடு அதிகரித்ததால் இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.

பிப்ரவரி நிலவரம்

சென்ற நிதி ஆண்டில் பிப்ரவரி மாத இறுதி நிலவரப்படி ரூ.26,500 கோடிக்கு கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 40 சதவீதம் (ரூ.18,856 கோடி) அதிகமாகும். மொத்த கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி வருவாயில் வண்ணமை இறாலின் பங்கு 65 சதவீதமாக உள்ளது. ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் பெருமளவில் வண்ணமை இறால்கள் வளர்க்கப்படுகின்றன.

1990-களின் இறுதியில் இந்தியாவில் இருந்து கடல் உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்ய ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதனையடுத்து, இந்திய கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி ஆணையம் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கடல் உணவு பொருள்கள் தரத்தை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பண்ணைகளில் வளர்க்கப்படும் இறால்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே பரிசோதனை செய்யப்படுகின்றன. இதனால் ஏற்றுமதியில் ஏற்படும் இடர்பாடுகள் தவிர்க்கப்படுகின்றன.

பரிசோதனை கூடங்கள்

கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி ஆணையம் இருபது பரிசோதனை கூடங்களை நிறுவி உள்ளது. இது தவிர ஏற்றுமதியாளர்களும் ஆய்வுகூடங்களை அமைத்துள்ளனர். இறால் வளர்ப்பு பண்ணை விவசாயிகள் பரிசோதனை கூடங்களை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்து வருகின்றனர். கடந்த நிதி ஆண்டில் 3 லட்சம் டன் கடல் உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply