இறக்குமதி செய்திகள்

வர்த்தக பற்றாக்குறை 1,335 கோடி டாலராக குறைந்தது

அக்டோபர் மாதத்தில், வர்த்தக பற்றாக்குறை 1,335 கோடி டாலராக குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் அது 1,425 கோடி டாலராக இருந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்ததே வர்த்தக பற்றாக்குறை குறைந்ததற்கு முக்கிய காரணம். எனினும் 2013 அக்டோபர் மாதத்தில் அது 1,050 கோடி டாலர் அளவிற்கே இருந்தது.

இறக்குமதி-ஏற்றுமதி

இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான வித்தியாசம் வர்த்தக பற்றாக்குறை எனப்படுகிறது. நம் நாட்டில் சரக்குகளைப் பொறுத்தவரை ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், பருப்பு, தங்கம் இறக்குமதி அதிகமாக உள்ளதால் வர்த்தக பற்றாக்குறை உயருகிறது. சேவைகள் பிரிவில் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக உள்ளதால் வர்த்தக உபரி நிலவுகிறது. நாட்டின் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் 5 சதவீதம் சரிந்து 2,609 கோடி டாலராக குறைந்துள்ளது.

சென்ற ஆண்டின் இதே மாதத்தில் ஏற்றுமதி 2,748 கோடி டாலராக இருந்தது. இறக்குமதி 3.62 சதவீதம் உயர்ந்து 3,945 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதனையடுத்து 1,335 கோடி டாலர் அளவிற்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இரும்புத்தாது, நவரத்தினம், தங்க ஆபரணங்கள், பொறியியல் சாதனங்கள் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் ஏற்றுமதி வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் தேவைப்பாடு குறைந்ததே இதற்கு காரணம்.தங்கம் இறக்குமதி கடந்த மே மாதத்தில் தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை பாரத ரிசர்வ் வங்கி சிறிது தளர்த்தியது.

இதன்படி, வங்கிகள் மற்றும் அங்கீரிக்கப்பட்ட முகமைகள் தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் இறக்குமதி அதிகரித்ததற்கு தங்கம் இறக்குமதி உயர்ந்ததே காரணமாகும். தங்கம் இறக்குமதி 109 கோடி டாலரிலிருந்து 417 கோடி டாலராக உயர்ந்துள்ளது. வெள்ளி இறக்குமதி 69 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி 1,450 கோடி டாலரிலிருந்து 1,236 கோடி டாலராக குறைந்துள்ளது.

Leave a Reply