காய் கறிகள் & பழங்கள்

வெங்காயம் ஏற்றுமதி 87 சதவீதம் சரிவு

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், சென்ற செப்டம்பர் மாதம், நாட்டின் வெங்காயம் ஏற்றுமதி, 87 சதவீதம் சரிவடைந்து, 20 ஆயிரம் டன்னிற்கும் கீழ் குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில், 1,50,833 டன்னாக உயர்ந்து இருந்தது.

ஏற்றுமதி விலை: கடந்த சில மாதங்களுக்கு முன், வெங்காயம் விலை, கிலோ, 80 – 100 ரூபாய் வரை உச்சத்திற்கு சென்றது. இதையடுத்து, உள்நாட்டில் வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதன்படி, 1 டன் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, 650 டாலரில் இருந்து, 900 டாலராக உயர்த்தப்பட்டது. மேலும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து,
அறுவடையான வெங்காயம், சந்தைகளுக்கு வரத்துவங்கியது. இதையடுத்து, வெங்காயம் விலை சரியத் துவங்கியது. வெங்காயம் ஏற்றுமதி குறைந்துள்ள போதிலும், உள்நாட்டில் அதன் விலை, மிகப்பெரிய அளவில் குறைய வில்லை. தற்போது, 1 கிலோ வெங்காயம், 50 – 60 ரூபாய் வரை, சந்தைகளுக்கேற்ப விற்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம், 29,247 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, சென்ற செப்டம்பர் மாதம், 19,218 டன்னாக குறைந்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதி குறைந்துள்ள போதிலும், அதன் வாயிலான வருவாய் உயர்ந்துள்ளது. சென்ற செப்டம்பர் மாதம், வெங்காயம் ஏற்றுமதி மூலம், 108.96 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது. சென்ற செப்டம்பரில், ஏற்றுமதி செய்யப்பட்ட, 1 டன் வெங்காயத்தின் விலை, 56,700 ரூபாயாக இருந்தது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 11,304 ரூபாயாக குறைந்து காணப்பட்டது.

வருவாய்: சென்ற ஆண்டு செப்டம்பரில், இந்தியா, 1,50,833 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்து, 170.51 கோடி ரூபாய் மட்டுமே ஈட்டியது என்பது குறிப்பிடத் தக்கது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், வெங்காயம் ஏற்றுமதி, 7,16,246 டன்னாக குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 10, 01,467 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply