காய் கறிகள் & பழங்கள்

வெங்காயம் விலையை கட்டுப்படுத்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை அதிகரிப்பு

வெங்காயம் விலையை கட்டுப்படுத்தவும், உள்ளூரில் சப்ளையை அதிகரிக்கவும், ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ஏற்றுமதி வெங்காயத்தின் குறைந்தபட்ச விலையை  ஒரு டன்னுக்கு 1,150 டாலராக (சுமார் ரூ.71,000) அதிகரித்துள்ளது.

வெங்காயம் விலை உயர்வு பல்வேறு மாநிலங்களில் பிரச்சனையை தோற்றுவித்துள்ளது. சாதாரண மக்கள் அன்றாட சமையலுக்கு தேவையான வெங்காயத்தை வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து உள்ளது. விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி ஏற்றுமதி வெங்காயத்தின் குறைந்தபட்ச விலையை டன்னுக்கு 650 டாலராக (சுமார் ரூ.39,975) நிர்ணயம் செய்தது. இதன் பிறகு சென்ற செப்டம்பர் 19ம் தேதி குறைந்தபட்ச விலையை டன்னுக்கு 900 டாலராக  (சுமார் ரூ.55,350) அதிகரித்தது.

இந்த உத்தரவு மூலம் குறைந்தபட்ச விலைக்கு குறைவான விலையில் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாது. ஏனெனில் இந்த விலைக்கு ஏற்றுமதி செய்தால், அதைவிட குறைந்த விலையில் வேறு நாடுகளில் இருந்து வெங்காயம் கிடைப்பதால் இந்தியாவின் வெங்காயத்தை வாங்குவதற்கு வெளிநாடுகளில் கிராக்கி இருக்காது. ஏற்றுமதி குறைந்து உள்நாட்டில் சப்ளை அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. எல்லா ரக வெங்காயத்தின் குறைந்தபட்ச விலை டன்னுக்கு 1,150 டாலர்தான் என்று வெளிநாடு வர்த்தக பொது இயக்குநர் (டிஜிஎப்டி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அரசின் நடவடிக்கையால் ஏற்றுமதி குறைந்தபோதிலும் நாட்டின் பல பகுதிகளில் சில்லரை விற்பனையில் வெங்காயத்தின் விலை இன்னும் குறையவில்லை. கிலோ ரூ.60 முதல் 70 வரை விற்கப்படுகிறது. குறைந்தபட்ச விலை நிர்ணயத்தால் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் வெங்காயம் ஏற்றுமதி கணிசமாக குறைந்து 29,000 டன்னாக இருந்தது. வெங்காயம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Leave a Reply