இறக்குமதி செய்திகள்

வெளிநாடுகளில் விலை குறைந்துள்ளதால் நிலக்கரி இறக்குமதி 20 சதவீதம் உயர்வு

பிப்ரவரி மாதத்தில் 1.16 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட 20 சதவீதம் அதிகமாகும். சர்வதேச சந்தைகளில் நிலக்கரி விலை குறைந்ததும், ரூபாய் மதிப்பு உயர்ந்ததுமே இதற்கு காரணம். ரூபாய் மதிப்பு உயருவதால் இறக்குமதி செலவினம் குறையும். அதேசமயம், ஜனவரி மாதத்தில் ரூபாய் மதிப்பு சரிவடைந்தது. இருப்பினும், உள்நாட்டில் தேவைப்பாட்டை ஈடுகட்டும் வகையில் உற்பத்தி இல்லாததால் நிலக்கரி அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டது. எனவே, நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல்–பிப்ரவரி) 14.35 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தை விட 15 சதவீதம் அதிகமாகும்.

நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் அனல்மின் திட்டங்களின் மின்சார உற்பத்தி, ஏப்ரல்–ஜனவரி மாத காலத்தில், 8 சதவீதம் உயர்ந்து 58,764 கோடி கிலோ வாட்டாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் மின் நிலையங்களின் நிலக்கரி இறக்குமதி 31 சதவீதம் அதிகரித்து 6.60 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.

இந்தியா தனது 80 சதவீத நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய கோல் இந்தியா நிறுவனத்தையே சார்ந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்நிறுவனம் தனது உற்பத்தி இலக்குகளை எட்ட முடியாமல் திணறுகிறது. அரசுத் துறைகளின் அனுமதி பெறுவதில் சிக்கல், வேலை நிறுத்தம் போன்றவற்றால் இந்நிறுவனம் சவால்களை எதிர்கொண்டுள்ளது. இம்மாதம் 31–ந் தேதியுடன் நிறைவடையும் நிதி ஆண்டில் மொத்தம் 47.50 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் எஸ்.நரசிங்க ராவ் தெரிவித்தார்.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply