பொருள் வணிகம்

வெளிநாட்டு வர்த்தகர்கள் பங்கேற்பால் தேயிலை ஏலம் அமோகம்

வெளிநாட்டு வர்த்தகர்கள் பங்கேற்பால் குன்னூரில் 90 சதவீத தேயிலை தூள் விற்பனையானது. நீலகிரியிலுள்ள குன்னூர் அரசு கூட்டுறவு ஏல மையத்தில் இந்தாண்டுக்கான 14வது ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 7 லட்சத்து 71,387 கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தது. இந்த ஏலத்தில் உள்நாடு, வெளிநாட்டு வர்த்தகர்கள் பங்கேற்றனர். இதனால், 90 சதவீத தேயிலை தூள் விற்பனையானது. ஆனால், அனைத்து ரகத்திற்கும் கிலோ ஒன்றுக்கு 3 வரை விலை சரிந்தது.

இந்த வார விலை நிலவரப்படி இலை ரகத்தில் சாதாரண தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு ரூ.52 முதல் ரூ.55 வரையிலும், உயர்வகை ரூ.70 முதல் ரூ.75 வரையிலும், டஸ்ட் ரகத்தில் சாதாரண வகை ரூ.60 முதல் ரூ.65 வரையிலும், உயர்வகை ரூ.75 முதல் ரூ.80 வரையிலும் விலை கிடைத்தது. விற்பனையாகாமல் தேக்கமடைந்த தூளும் இந்த வாரம் ஏலம் போனது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் வர்த்தகர்களின் பங்களிப்பு அதிகரித்து இருந்தாலும் விற்பனை அளவு உயர்வதற்கு முக்கிய காரணம் தேயிலை தூளின் விலையை குறைத்து வழங்கியது தான். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Leave a Reply