வங்கிக் கடன் & மான்யம்

1000 பேருக்கு மானியக் கடன்

அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் சார்பில், நிகழாண்டில் 1000 பேருக்கு மானியக் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் மோகன் கூறினார்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற “படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்’ கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்துப் பேசியது:

கடந்த மூன்று ஆண்டுகளில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான முதலீட்டு மானியம், மின்னாக்கி மானியம் போன்ற பல்வேறு மானியங்களாக மொத்தம் ரூ. 260 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 13,229 தொழில் நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. மாவட்ட தொழில் மையங்கள், மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த தாற்காலிகப் பதிவுச் சான்றிதழ், நிரந்தரப் பதிவுக் சான்றிதழ் ஆகியவை முழுமையாக இணையதளம் மூலம் பதிவு செய்யும் நடைமுறையில் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,048 பேருக்கு தாற்காலிக ஒப்புதல் அளிக்கப்பட்டு 929 பேருக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில், 701 பேருக்கு ரூ.74 கோடி மானியத்துடன் கடன் அளிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் 1000 பேருக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து, அவர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply