இரும்பு தாது & உலோகம்

11 ஆண்டுகளில், உருக்கு பொருள்கள் இறக்குமதி ஏழு மடங்கு அதிகரிக்கும்

உருக்கு பொருள்கள் இறக்குமதி வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் ஏழு மடங்கு அதிகரித்து 5 கோடி டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே காலத்தில் இந்தியாவின் உருக்கு தேவைப்பாடு 23 கோடி டன்னை தாண்டும். இதனை ஈடுகட்டும் அளவிற்கு உள்நாட்டில் போதுமான அளவிற்கு உற்பத்தி இருக்காது. எனவே, இறக்குமதி அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி அதிகரிப்பதால் அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து ரூபாய் மதிப்பு சரிவடையும்.

மூன்று ஆண்டுகளாக…

கடந்த மூன்று ஆண்டுகளாக உருக்கு பொருள்கள் ஏற்றுமதியை விட இறக்குமதியே அதிகமாக உள்ளது. 2012-13-ஆம் நிதி ஆண்டில் நம் நாட்டின் உருக்கு பொருள்கள் இறக்குமதி 79 லட்சம் டன்னாக இருந்தது. பொருளாதார மந்த நிலை, நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளில் இறங்க தயக்கம் காட்டின. இது போன்ற காரணங்களால் நடப்பு நிதி ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் உருக்கு பொருள்கள் இறக்குமதி 28 சதவீதம் குறைந்து 37 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

பொருளாதார மந்தநிலை மற்றும் உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் உள்நாட்டில் உருக்கு பொருள்கள் விற்பனை குறைந்துள்ளது. எனவே, உருக்குத் துறை நிறுவனங்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தும்.

மத்திய அரசு உருக்கு மற்றும் உருக்கு சார்ந்த பொருள்களுக்கான இறக்குமதி விதிமுறைகளை தளர்த்தியுள்ளதால் எதிர் காலத்தில் இறக்குமதி அதிகரிக்கும் என உள்நாட்டு உருக்கு உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply