வணிகச் செய்திகள்

2013 ஆம் ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 3 சதவீதம் சரிவடைந்தது

இந்தியாவில், 2013 ஆம் ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 3 சதவீதம் சரிந்து 2,203 கோடி டாலராக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் (2012) 2,278 கோடி டாலராக இருந்தது.

சென்ற ஆண்டில், சேவைகள், மருந்து, மோட்டார் வாகனம், கட்டுமானம், தொலைத் தொடர்பு, கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர், ரசாயனம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் அன்னிய நேரடி முதலீட்டை அதிகளவில் ஈர்த்துள்ளன. நம் நாட்டில் மொரீசியஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரபு குடியரசு நாடுகள், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.

இங்கிலாந்தின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான டெஸ்கோ, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் எடிஹாட் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசின் ஒப்புதலோடு பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை மேற்கொண்டுள்ளன. அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் வகையில், தொலைத் தொடர்பு, பாதுகாப்பு, பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு, விளைபொருள் முன்பேர வர்த்தகம், மின் பகிர்மான பிரிவு மற்றும் பங்கு சந்தைகள் உள்ளிட்ட பல துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

நடப்பு ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 1 லட்சம் கோடி டாலர் தேவைப்படுகிறது. மேலும் ரூபாயின் வெளிமதிப்பு சரிவை தடுக்க அதிகளவில் டாலர் தேவைப்படுகிறது. இது போன்ற காரணங்களால் அன்னிய நேரடி முதலீடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அன்னிய நேரடி முதலீட்டால் நாட்டின் தொழில்வளம் பெருகுகிறது. வேலைவாய்ப்பு அதிகரித்து, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில் நுணுக்கங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

Leave a Reply