காய் கறிகள் & பழங்கள்

2013-14-ஆம் நிதி ஆண்டில் வெங்காயம் ஏற்றுமதி 25% வளர்ச்சி

2013-14-ஆம் நிதி ஆண்டில் வெங்காயம் ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் 25 சதவீதம் அதிகரித்து ரூ.2,877 கோடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைத்ததே இதற்கு காரணமாகும். முந்தைய நிதி ஆண்டில் (2012–13) ரூ.2,294 கோடி அளவிற்கே வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தையில் 1 டன் வெங்காயத்திற்கு ரூ.21,183 கிடைத்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 68 சதவீதம் அதிகமாகும். 2012-13-ஆம் நிதி ஆண்டில் 1 டன் வெங்காயம் ரூ.12,590 என்ற விலையில் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

வெங்காயம் ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் அதிகரித்துள்ள போதிலும் அளவு அடிப்படையில் குறைந்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் சில மாதங்கள் வெங்காயம் ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்ததே இதன் பின்னணியாக இருந்தது.

வெங்காயம் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி உள்நாட்டில் சப்ளையை அதிகரிக்கும் நோக்கில் 2013 செப்டம்பர் முதல் பலமுறை குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு உயர்த்தியது. இதனால் அளவு அடிப்படையில் வெங்காயம் ஏற்றுமதி குறைந்தது.

பிறகு உள்நாட்டில் வெங்காயம் வரத்து அதிகரித்து விலை குறைந்ததையடுத்து கடந்த டிசம்பர் மாதம் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு 350 டாலரிலிருந்து 150 டாலராக (1 டன்) குறைந்தது. வெங்காயம் வரத்து மேலும் சீரானதுடன் விலையும் குறைந்ததையடுத்து குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை ரத்து செய்ததுடன் ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நீக்கியது.

ஏற்றுமதி

சென்ற நிதி ஆண்டில் வெங்காயம் ஏற்றுமதி அளவு அடிப்படையில் 25.46 சதவீதம் சரிந்து 18.22 லட்சம் டன்னிலிருந்து 13.58 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. நடப்பு 2013-14 பருவத்தில் (ஜூலை-ஜூன்) வெங்காயம் உற்பத்தி சென்ற ஆண்டைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகரித்து 1.90 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற பருவத்தில் 1.68 கோடி டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டது.

Leave a Reply