வணிக மேலாண்மை

29 விமான நிலையங்களை உலக அளவில் பிரபலப்படுத்த நடவடிக்கை

நாட்டின் 29 விமான நிலையங்களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ.) நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து ஏ.ஏ.ஐ. செய்தித் தொடர்பாளர் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்த விவரம்:

சர்வதேச விமானப் போக்குவரத்து தொடர்பான கருத்தரங்கு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறுகிறது. உலக விமானத் தடங்கள் மேம்பாட்டு அமைப்பு இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், விமானத் தயாரிப்பாளர்கள், பல நாடுகளைச் சேர்ந்த விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணையங்கள் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொள்கின்றன. சர்வதேச அளவில் புதிய விமான சேவைகள், தடங்கள், தொழில்நுட்பங்கள் தொடர்பாகத் திட்டமிட இந்தக் கருத்தரங்கு உதவி வருகிறது. இந்தியா சார்பில் இக்கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையமான ஏ.ஏ.ஐ. கலந்து கொண்டுள்ளது.

இந்தக் கருத்தரங்கின்போது, நாட்டின் 29 விமான நிலையங்களை ஏ.ஏ.ஐ. பிரபலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த விமான நிலையங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் புது தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களும் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்களில் அமைந்துள்ள விமான நிலையங்களும் அடங்கும். இந்த நகரங்களில் உள்ள விமான நிலையங்களை நவீனமாக்கவும் மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

முன்னதாக, இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பு தொடர்பாக, அமெரிக்க வர்த்தக மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஏ.ஏ.ஐ. கடந்த வாரம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. பயணிகளையும் பொருள்களையும் சோதனை செய்யும் ஸ்கேனர்கள், எக்ஸ்ரே கருவிகள், வெடிகுண்டுகளைக் கண்டறியும் கருவிகள் உள்ளிட்டவற்றின் தர நிர்ணயம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்றார் அவர்.

நாடு முழுவதும் 50 விமான நிலையங்கள், நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 29 விமான நிலையங்களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்த கருத்தரங்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply