வணிகச் செய்திகள்

297 கோடி டாலர் உயர்வு இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, ஏப்ரல் 4-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 297 கோடி டாலர் உயர்ந்து 30,665 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, மார்ச் 28-ந் தேதியுடன் முடிந்த முந்தைய வாரத்தில் 504 கோடி டாலர் அதிகரித்து 30,367 கோடி டாலராக இருந்தது. தொடர்ந்து ஆறு வாரங்களாக அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது. இதனையடுத்து பாரத ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு தற்போது பலன் கிடைக்க தொடங்கியுள்ளது.

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பில், பவுண்டு, யூரோ, யென் போன்ற இதர நாட்டு செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர். மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் வைக்கப்பட்டுள்ள நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு டாலரில் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே, டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது. நடப்பு ஆண்டில் இதுவரை அன்னிய செலாவணி கையிருப்பு 1,280 கோடி டாலர் அதிகரித்துள்ளது.

அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டை அதிகரித்து வருகின்றன. இதனால் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அன்னிய செலாவணி கையிருப்பு 800 கோடி டாலர் அதிகரித்துள்ளது.

Leave a Reply