காய் கறிகள் & பழங்கள்

40 ஆண்டு கால கட்டுப்பாடு நீங்கியது நேரடியாக வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி

நாற்பது ஆண்டு காலமாக இருந்து வந்த கட்டுப்பாடு நீங்கியது. இனி யார் வேண்டுமானாலும் வெங்காயத்தை நேரடியாக ஏற்றுமதி செய்யலாம்.

விதிமுறை

கடந்த 1974-ஆம் ஆண்டில் குறிப்பிட்ட ஏஜென்சிகள் வாயிலாக மட்டுமே வெங்காயம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. ஏற்றுமதியாளர்கள் வெங்காயம் ஏற்றுமதி செய்ய இவ்வமைப்புகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இதற்காக ஏற்றுமதியில் 1 சதவீதத்தை கட்டணமாக செலுத்தி வந்தனர்.

விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இந்த விதிமுறையை தளர்த்துமாறு வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து கடந்த வாரம் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் வெங்காயம் ஏற்றுமதிக்கான விதிமுறைகளை தளர்த்தபட்டதாக அறிவித்தது. இதன் காரணமாக வெங்காயம் ஏற்றுமதி அதிகரிக்கும்.

கடந்த ஆண்டில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-ஆக உயர்ந்தது. எனவே, உள்நாட்டில் சப்ளையை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கான குறைந்த பட்ச விலையை நிர்ணயித்தது. இந்நிலையில், வெங்காயம் உற்பத்தி வரலாறு காணாத அளவிற்கு அதிகரிக்கும் என்ற நிலைப்பாட்டால் மத்திய அரசு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நீக்கியது.

ஏப்ரல் மாதத்தில் ரபி பருவ வெங்காயம் அறுவடை பணிகள் தொடங்கி சந்தைக்கு வெங்காயம் வரத்து அதிகரிக்கும். எனவே, உள்நாட்டில் வெங்காயம் விலை வீழ்ச்சியை தடுக்க ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இதன் காரணமாக விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும்.

எதிர்பாராத மழை

வட மாநிலங்களில் பெய்த எதிர்பாராத மழையால் வெங்காயம் பயிர்கள் சேதமடைந்துள்ள போதிலும் உற்பத்தியில் பெரிய அளவில் பாதிக்காது. ஏனென்றால் வெங்காயம் சாகுபடி பரப்பளவு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply