இறக்குமதி செய்திகள்

8 மாதங்களில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் குறைந்தது

டாலருக்கு நிகரான ரூபாய் வெளிமதிப்பு உயர்வு, சர்வதேச நிலவரங்களால் மார்ச் மாதத்தின் முதல் 15 தினங்களில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசின் எரிபொருள் மானியச் சுமை குறையும்.

ஆகஸ்டு மாதம்

இவ்வாண்டு மார்ச் 11–ந் தேதி நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் ரூ.6,404–ஆக குறைந்துள்ளது. 2013 ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு தற்போதுதான் கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு இந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைப்பாட்டில் சுமார் 87 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. கடந்த 2013 ஆகஸ்டு 28–ந் தேதி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு 68.85–ஆக வீழ்ச்சி அடைந்தது. இதனையடுத்து, செப்டம்பர் மாத தொடக்கத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து இருந்தது.

ரூபாய் மதிப்பு உயர்வு

இந்நிலையில், ரூபாய் மதிப்பு உயர்வால் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் குறைந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் சென்ற ஒரு மாதத்தில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 சதவீதம் உயர்ந்து சுமார் 61–ஆக உள்ளது. கடந்த 2013 ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடும்போது ரூபாய் மதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.

சென்ற ஒரு மாத காலத்தில் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை 1 சதவீதம் குறைந்துள்ளது. 2013 ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடும்போது இது 7 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய அரசுக்கு மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இது சாதகமான அம்சமாகும்.

நிதி பற்றாக்குறை

நடப்பு நிதி ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை முழு ஆண்டிற்கான இலக்கை காட்டிலும் ரூ.8,000 கோடி அதிகரித்து ரூ.5.32 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. எனவே, இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட படி நிதி பற்றாக்குறையை 4.6 சதவீதமாக வைத்து இருப்பது மத்திய அரசுக்கு ஒரு சவாலாக இருக்கும். இந்நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் குறைந்துள்ளதால் நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் வரும். மேலும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு குறையும்.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply