வர்த்தகக் கண்காட்சி & சந்தை

ஈரோட்டில் உதயமாகிறது பிரமாண்ட ஜவுளி வர்த்தக சந்தை

ஜவுளி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிச் சந்தை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 80 சதவீத கட்டுமான பணி நிறைவடைந்துள்ள நிலையில், வாரச் சந்தையில், வர்த்தகர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யும் பணி துவங்கியுள்ளது.

விவசாயத்துக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கும், மிகப்பெரிய துறையாக, ஜவுளித்தொழில் விளங்குகிறது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டில், ஜவுளித் துறை வளர்ச்சி, மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கோல்கட்டா, லூதியானா, மும்பை, பெங்களூரு, தமிழகம் போன்ற பகுதிகள், முக்கிய ஜவுளி உற்பத்தி மையங்களாக உள்ளன. தென்னிந்திய அளவில், பின்னலாடை உற்பத்தியில், திருப்பூர்; கைத்தறி, விசைத்தறி துணி உற்பத்தியில், ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன.

ஈரோடு மாவட்ட சுற்றுப்பகுதிகளில் மட்டும், 1.5 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. ஆண்டுக்கு, 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான, கைத்தறி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாடு முழுவதும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, உள்நாட்டு வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள், இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்கின்றனர். ஆயினும், போதுமான சந்தை வாய்ப்பு இல்லாததால், இப்பகுதி ஜவுளி துறையினர், உற்பத்தி செய்யும் ஆடை ரகங்களை சந்தைப்படுத்துவதில், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. தாங்கள் உற்பத்தி செய்யும் ஜவுளி ரகங்களை, அசோகபுரம், கனி மார்க்கெட், சென்ட்ரல் மார்க்கெட் ஆகிய இடங்களில், வாரச்சந்தை அமைத்து சந்தைப்படுத்துகின்றனர்.

உள்நாட்டு கைத்தறி மற்றும் ஜவுளி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், விசைத்தறி தொழில் மேம்பாட்டு திட்டத்தில், தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில், ஒருங்கிணைந்த விசைத்தறி பெருங்குழும திட்டத்தை அமல்படுத்த, 2009ல் திட்டம் வகுத்தது. இதில், தமிழகத்தில், விசைத்தறி தொழில் மையமாக உள்ள, ஈரோடு மாவட்டத்தில், ஜவுளிச் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த ஜவுளிச் சந்தை அமைக்க, ஈரோட்டை சேர்ந்த, யு.ஆர்.சி., புரமோட்டர்ஸ், லோட்டஸ் ஏஜன்சி ஆகிய, இரு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து, ஜவுளிச் சந்தை அமைக்க இடம் தேர்வு செய்தது. ஈரோடு தேசிய நெடுஞ்சாலை, என்.எச்., 47 அருகே, சித்தோடு கங்காபுரத்தில், 18 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அரசு அனுமதியுடன், 2011ல், ஜவுளிச் சந்தை கட்டுமான பணி துவங்கியது. இதற்காக, மத்திய அரசு சார்பில், 40 கோடி ரூபாய், மாநில அரசு சார்பில், பத்திர பதிவுக்கான கட்டண சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.

“டெக்ஸ் வேலி’ என்ற பெயரில், ஒருங்கிணைந்த விசைத்தறி ஜவுளி வர்த்தக சந்தை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, வாரச்சந்தை, தினசரி சந்தை மற்றும் கண்காட்சி அரங்கு என, மொத்தம் மூன்று பிரிவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஒருங்கிணைந்த சந்தை வளாகத்தின் முன்பகுதியில், 4 லட்சம் சதுரடியில், நான்கு தளங்களுடன் வாரச்சந்தை; அருகில், 11.5 லட்சம் சதுரடியில், ஆறு தளங்களுடன் தினசரி சந்தை; ஒரு லட்சம் சதுரடியில், மூன்று தளங்களுடன், சர்வதேச கண்காட்சி அரங்கு அமைக்கப்படுகின்றன.
பிரமாண்டமாக அமைக்கப்படும் ஜவுளிச் சந்தையில், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் வசதிக்காக வங்கி கிளைகள், ஏ.டி.எம்.,மையம், தடையில்லா மின்சாரம், நாளொன்றுக்கு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், சூரிய மின் உற்பத்தி; போக்குவரத்து புக்கிங் அலுவலகங்கள் அமைய உள்ளன.

மேலும், புதிய திருப்பூர் மேம்பாட்டு திட்டம் மூலம், 5 லட்சம் லிட்டர் குடிநீர், உடற்பயிற்சி மையம், பண பாதுகாப்பு பெட்டகங்கள், தங்கும் அறை, அவசர கால மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ், பிரமாண்ட பார்க்கிங் வசதி, வர்த்தக பரிமாற்ற அறைகள், கழிவுநீர் மறுசுழற்சி மையம் என, அனைத்து வகையான வசதிகளும் செய்யப்படுகின்றன. 80 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டன. தற்போது, வாரச்சந்தை வளாகத்தில், வர்த்தகர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.

ஈரோடு டெக்ஸ்டைல் மால் லிட்., அமைப்பு நிர்வாக இயக்குனர் குமார், திட்ட ஆலோசகர் ஜெயமோகன் ஆகியோர் கூறியதாவது: ஈரோட்டில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை சந்தைப்படுத்த, போதுமான இட வசதியில்லை. இதனால், தொழில் வளர்ச்சி பெறுவதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், ஈரோடு மாவட்டத்தில், ஒருங்கிணைந்த விசைத்தறி பெருங்குழும திட்டத்தை அமல்படுத்தியது.

இத்திட்டத்துக்காக, “ஈரோடு டெக்டைல் மால் லிமிடெட்’ உருவாக்கப்பட்டது. தலைவராக, லோட்டஸ் நிறுவன இயக்குனர் பெரியசாமி, துணைத் தலைவராக, யு.ஆர்.சி., நிறுவன இயக்குனர் தேவராஜன், மேலாளராக ராஜசேகர், திட்ட ஆலோசகராக ஜெயமோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த அமைப்பு, “டெக்ஸ் வேலி’ என்ற பெயரில், ஒருங்கிணைந்த ஜவுளிச் சந்தை அமைக்க, 450 கோடி ரூபாயில் திட்டம் வகுத்தது. ஆடைகளை சந்தைப்படுத்துவதற்கு, தினசரி சந்தை, வாரச்சந்தை, புதிய ரகங்களை அறிமுகப்படுத்த, தொழில்நுட்ப கருத்தரங்கு, மெஷினரிகளை அறிமுகப்படுத்தும் வகையில், சர்வதேச கண்காட்சி மையங்கள் இடம் பெறுகின்றன. வர்த்தகர்கள் பயன்பாட்டுக்கான அனைத்து வசதிகளும், இவ்வளாகத்தில் கொண்டு வரப்படும். பண பரிமாற்றத்துக்காக, ஆறு முன்னணி வங்கிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

தடையில்லா மின்சாரம், குடிநீர், பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்படுகிறது. தற்போது, 80 சதவீத கட்டுமான பணி நிறைவடைந்து, வாரச்சந்தை கட்டடத்தில், வர்த்தகர்களுக்கான பதிவு நடந்து வருகிறது. ஈரோடு மட்டுமின்றி, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த, உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர். மொத்தம், 6,000 கடை அமைக்கப்படும்; இதுவரை, 4,500 கடைகளுக்கு பதிவு நடந்துள்ளது. வரும் ஜூன் மாதம், ஜவுளிச் சந்தை திறக்கப்பட்டு, வர்த்தகர்களின் முழு பயன்பாட்டுக்கு விடப்படும். ஜவுளிச் சந்தை முழு பயன்பாட்டுக்கு வரும்போது, தற்போதைய வர்த்தகத்தை விட, ஆண்டுக்கு கூடுதலாக, 2,500 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

Leave a Reply